இ-பதிவு நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் - நீலகிரி கலெக்டர் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வருகைக்கான இ-பதிவு நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. நோய்த் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஏற்கெனவே பொதுப் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தளர்வுகளுடன் ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. விரைவில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நீலகிரி மாவட்டம் அதிகமான சுற்றுலாப் பகுதிகளை கொண்டுள்ளதால் அதிகபடியான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அரசு தெரிவித்துள்ளபடி மாவட்டத்திற்குள் நுழைவதற்கு முறையாக இ-பதிவு செய்த பின்னர் தான் வர வேண்டும். இ-பதிவு நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். சுற்றுலாப் பயணிகள் தவறாமல் முக கவசம் அணிந்து அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.