மீண்டும் சோனியாவுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை

புதுடில்லி: மீண்டும் சோனியாவுக்கு சம்மன்... நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 21ம் தேதி ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.

புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'அசோசியேட்டர் ஜர்னல் லிமிடெட்' நிறுவனம், நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட பத்திரிகைகளை நடத்தி வந்தது. கடன் நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்துக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில், 90 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டது. இந்தக் கடனில் இருந்து விடுபடுவதற்காக, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, 'யங் இந்தியன்' என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியது.

இந்நிறுவன இயக்குனர்களாக காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா, அவருடைய மகனும், எம்.பி.,யுமான ராகுல் உள்ளனர். இந்த பரிமாற்றம் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை பறிக்கும் வகையில் நடந்ததாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, 2013ல் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இதில் நடந்துள்ள பண மோசடிகள் தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா மற்றும் ராகுலுக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டது.

அதில், ராகுல் பல முறை அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். அதேநேரத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால், சோனியா கடந்த மாதம் ஆஜராகவில்லை. மேலும், டாக்டர்கள் அறிவுரைப்படி ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால், நேரில் ஆஜராவதற்கு கால அவகாசம் கோரியிருந்தார். இதனை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்று கொண்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக வரும் 21ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சோனியாவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.