தன்னைத்தானே தாக்கிக் கொண்ட பிரபல இசைக்கலைஞர்... ரசிகர்கள் அதிர்ச்சி

நியூயார்க்: தன்னைத் தானே தாக்கிக் கொண்டார்... பிரபல இசைக் கலைஞர் மெஷின் கன் கெல்லியின் (Machine Gun Kelly's) நிகழ்ச்சி ஜூன் 28ஆம் திகதி அன்று மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெற்றது.

அப்போது, அரங்கம் முழுவதும் ரசிகர்கள் கூடியிருக்க, நிகழ்ச்சியின் நடுவே, அமைதியை இழந்து அவர் விசித்திரமாக நடந்து கொண்டார். திடீரென, பாட்டிலை எடுத்து தனது தலையிலேயே அடித்து கொண்டார். இது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அமெரிக்க ராப் பாடகரான அவர், பார்வையாளர்கள் பகுதியில் நின்று கொண்டிருந்த ரசிகர்களிடம் கடிந்து கொண்டார். பின்னர் அவரது கிதாரை அடித்து நொறுக்கினார்.

நியூயார்க் நகரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது, தனது முகத்தை ஷாம்பெயின் கண்ணாடியை கொண்டு அவரே தாக்கி கொண்டார். இதன் காரணமாக, அவரின் நெற்றியில் இருந்து ரத்தம் தாரை தாரையாக வழிந்தது.
பின்னர், சிறிது தூரம் நடந்து சென்று கத்திக்கொண்டிருந்தபோது இசை குழுவினரில் ஒருவர் அவரைப் பிடித்து இழுத்தார். இதற்கு மத்தியிலும், இசைக்குழு பொருட்படுத்தாமல் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தினர்.

இறுதியில், மெஷின் கன் மீண்டும் மேடைக்கு திரும்பினார். இந்நிலையில் பாடகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பகிர்ந்துள்ளார். சம்பவம் நடந்த பிறகு எடுத்த படங்களையும் பகிர்ந்துள்ளார். நிகழ்ச்சியின் நடுவே இசை கலைஞர் இப்படி நடந்து கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.