நீட் நுழைவுத் தேர்வுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசு வெளியிட்டது

மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு வருகிற 13-ந்தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. கொரோனாவுக்கு மத்தியில் இந்த நேரத்தில் தேர்வை நடத்தினால் அது மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தேர்வை தள்ளி வைக்க அனுமதிக்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி 13-ந் தேதி தேர்வு நடைபெற உள்ளது.

கொரோனா அறிகுறி இருந்தாலும் அவர்களுக்கு தனி அறையை ஒதுக்கி தேர்வு எழுத அனுமதிக்கலாம் என ஏற்கனவே மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டு முறைகளை கூறியிருந்தது. தற்போது, மத்திய அரசு புதிதாக வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களையும் தேர்வு எழுதவது பற்றி தேர்வு மைய அதிகாரிகள் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் அதிகமாக மாணவர்கள் கூடுவதை தடுக்கும் வகையில் விரிவான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாணவர்கள் உள்ளே நுழையும் வழி, வெளியே செல்லும் பாதைகளில் கூட்டம் அதிகமாகி விடாமல் தடுக்க உரிய ஏற்பாடுகளை செய்து இருக்க வேண்டும். அனைத்து மாணவர்களும் குறைந்தது 6 அடி தூரத்தில் நிற்கும் வகையில் வரிசை ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். நோய் பாதிப்பு மண்டலங்களில் உள்ள எந்தவொரு ஊழியர்களும் நீட் தேர்வு மைய பணிக்கு அனுமதிக்கப்படக்கூடாது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், நோய் பாதிப்பு மண்டலங்களில் தேர்வு மையங்களை அமைக்க கூடாது. மையங்களுக்கு வரும் ஊழியர்கள், மாணவர்கள் என அனைவரும் கொரோனா பாதுகாப்பு சாதனங்களை வழங்க வேண்டும். சானிடைசர், முக கவசம், கையுறை மற்ற தேவையான சாதனங்கள் போதுமான அளவிற்கு வைத்திருக்க வேண்டும். வயதான ஊழியர்கள், கர்ப்பிணி பெண்கள், ஏற்கனவே கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை தேர்வு மைய பணிக்கு அனுமதிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.