நாகையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் அச்சம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சில அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. இதனால் நாகை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று நாகை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தி வருகின்றனர். அதன்படி மீனவர்களும் கரைக்கு திரும்பினர்.

இதனால் இன்று நாகை, அக்கரைபேட்டை, வேதாரண்யம், வேளாங்கண்ணி உள்பட 25 மீனவ கிராமங்களை சேர்ந்த 70 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 700 விசைப்–படகுகள், 3000 பைபர் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்தனர்.