போதைப்பொருள் பயன்படுத்திய நடிகைகளின் முடி, ரத்த மாதிரியை திருப்பி அனுப்பிய தடயவியல் ஆய்வகம்

கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் குறித்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 14 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோர் போதைப்பொருட்கள் பயன்படுத்தி உள்ளார்களா? என்பதை கண்டறிய, கடந்த மாதம் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில், 2 பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதனால் அவர்களது ரத்த மாதிரி, சிறுநீர், முடி, செல்போன்கள் உள்ளிட்டவை தடயவியல் ஆய்வுக்காக ஐதராபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அனுப்பி வைத்திருந்தனர். தற்போது தடயவியல் ஆய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்திருந்த நடிகைகளின் ரத்த மாதிரி, முடியை தடயவியல் ஆய்வகம் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகைகளின் ரத்த மாதிரி, முடி உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் கவரில் வைத்து போலீசார் அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. பிளாஸ்டிக் கவரில் அனுப்பியதால், அவற்றை சரியாக ஆய்வு செய்ய முடியாது என்றும், பாதுகாப்பான முறையில் அனுப்பும்படி போலீசாருக்கு, தடயவியல் நிபுணர்கள் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நடிகைகளுக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை நடத்தி, அவர்களது ரத்த மாதிரி, சிறுநீர், முடியை தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் போலீசார் அலட்சியமாக செயல்பட்டதாகவும், அதனால் தான் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டவை திரும்பி வந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் பேட்டி அளிக்கையில், போதைப்பொருள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு எதிராக போலீசாருக்கு பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அந்த ஆதாரங்கள், தகவல்கள் அனைத்தும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரத்தில் போலீசார் அலட்சியமாக செயல்படவில்லை. போதைப்பொருள் விவகாரம் குறித்து தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.