வியட்நாம் சுற்றுலா நகரில் சுற்றுலா பயணிகள் 80 ஆயிரம் பேரை வெளியேற்ற அரசு முடிவு

உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷியா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. இருப்பினும் தென் கொரியா, வியட்நாம், நியூசிலாந்து, தாய்லாந்து ஆகிய நாடுகள் கொரோனாவின் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துவிட்டன.

வியட்நாம் அரசின் தீவிர நடவடிக்கையால் அங்கு கொரோனாவால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை. தற்போது, அந்நாட்டில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு 100 நாள்கள் கடந்துவிட்ட நிலையில் தற்போது புதிதாக 3 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த நாட்டின் 5-வது மிகப்பெரிய நகரமான தனாங் நகரில் தான் தற்போது கொரோனா பாதிப்பு 3 பேருக்கு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புடைய இந்த 3 பேரும் வெளி மாகாணங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ பயணம் செய்யாத சூழலில் அவர்களுக்கு வைரஸ் தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டிருப்பது வியட்நாம் அரசுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வியட்நாமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் தனாங் நகரில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள சுற்றுலா பயணிகளை வெளியேற்ற அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, தினமும் 100 விமானங்கள் மூலம் நாட்டிலுள்ள 11 இடங்களில் உள்ள 80 ஆயிரம் சுற்றுலா பயணிகளை இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான பணிகள் நடந்து முடிய 4 நாட்கள் ஆகும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.