இளம்பெண் சுவாதி கொலையாளி ராம்குமார் மரண வழக்கில் மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியது

மீண்டும் தூசு தட்டப்படுகிறது இளம்பெண் சுவாதியை கொன்ற ராம்குமாரின் மரண வழக்கு.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி 2016ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ராம்குமார் கைது செய்யப்பட்டார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், அங்கிருந்த மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. பின்னர் அவரது மரணம் குறித்த பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் சிபிஐ விசாரணை நடத்தவும் கோரிக்கை எழுந்தது.

அதேகாலக்கட்டத்தில் பல்வேறு அரசியல் பரபரப்புகளால் ராம்குமார் மரண வழக்கு அப்படியே அமுங்கி போனது. இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு அந்த வழக்கை மனித உரிமை ஆணையம் தூசி தட்டியுள்ளது. ராம்குமார் மரணம் சம்பவத்தின் போது வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து மனித உரிமைகள் ஆணையம் வழக்கை விசாரணைக்கு எடுத்து சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

புழல் சிறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன், துணை ஜெயிலர் உதயகுமார், உதவி ஜெயிலர் பிச்சாண்டி, தலைமை வார்டன் சங்கர்ராஜ், முதல் நிலை வார்டன்கள் ராம்ராஜ், பேச்சிமுத்து ஆகியோர், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு செப்டம்பர் 30ம் தேதி நேரில் ஆஜராகும்படி, மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.