அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் கையாடல் செய்தவர் கைது

காஞ்சிபுரம்: பணம் கையாடல் செய்தவர் கைது... காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் பணத்தை கையாடல் செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

பொன்னேரிக்கரையில் உள்ள அக்கல்லூரியில் சேரும் அனைத்து மாணவர்களிடமும் முதலாம் ஆண்டில் டெபாசிட் தொகை பெற்று, பின்னர் அவர்கள் 4 ஆண்டு படிப்பை முடித்த பிறகு திருப்பித் தருவது வழக்கம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு படிப்பை முடித்தவர்களுக்கு இந்தாண்டு பிப்ரவரியில் வரவேண்டிய டெபாசிட் தொகை செலுத்தப்படாததால், சம்மந்தப்பட்ட வங்கி கணக்கில் ஆய்வு செய்த போது அதில் வெறும் 401 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது.

இதேபோல், கல்லூரியின் பல்வேறு வங்கிகளில் உள்ள 15 கணக்குகளையும் ஆய்வு செய்த கல்லூரி நிர்வாகம், அதில் கோடிக்கணக்கான ரூபாய் மாயமாகியிருப்பதை கண்டுபிடித்தனர்.

இது குறித்த புகாரில், கல்லூரியின் வங்கிக் கணக்குகளை நிர்வகித்து வந்த பிரபு என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில், ஆந்திராவில் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர். 3 கோடியே 80 லட்ச ரூபாய் அளவிற்கு பிரபு கையாடல் செய்து பல்வேறு வகைகளில் செலவு செய்ததுடன், ஆருத்ரா, ஐ.எப்.எஸ். போன்ற நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.