மத்திய அமலாக்கத்துறை நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து இன்றும் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்துகிறது

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து மத்திய அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி,நேற்று காலை 11.10 மணிக்கு டெல்லியில் உள்ள அதன் அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார். பிற்பகல் ராகுல்காந்திக்கு 80 நிமிடங்களுக்கு உணவு இடைவேளை அளிக்கப்பட்டது.அதன் பின்னர் மாலையிலும் விசாரணை தொடர்ந்தது.பிறகு 10 மணி நேர விசாரணை இரவு முடிவடைந்தது.

இதனையடுத்து கார் மூலம் தனது வீட்டிற்கு ராகுல்காந்தி திரும்பினார். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். முன்னதாக அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்தும் ராகுல் காந்திக்கு ஆதரவாகவும் டெல்லியில் காங்கிரசார் மூத்த தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி பேரணியாக சென்ற காங்கிரஸ் தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.

காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட கட்சி தலைவர்கள் சரோஜினி நகர் காவல்நிலையத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டனர்.

மேலும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சக்திசிங் கோஹில், அனில் சவுத்ரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் டெல்லியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் காவலில்
வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்றும் காங்கிரசாரின் போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் குரலை அவர்கள் நசுக்க நினைப்பதாகவும் அதை தடுக்க தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று காங்கிரஸ் சார்பில் கூறிஉள்ளனர்