மும்பை நகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 423 ஆக அதிகரிப்பு

சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது, உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. மும்பை மாநகராட்சி பகுதியில் நேற்று புதிதாக 1,035 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மும்பை நகரில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 423 ஆக அதிகரித்துள்ளது.

மும்பை மாநகராட்சி பகுதியில் 72 ஆயிரத்து 648 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் அங்கு கொரோனாவிலிருந்து குணமானவர்கள் சதவீதம் 71 ஆக அதிகரித்து உள்ளது. தற்போது 23 ஆயிரத்து 728 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது, மும்பையில் மேலும் 41 பேர் கொரோனா நோய்க்கு பலியாகியுள்ளனர். இதுவரை மும்பை நகரில் 5 ஆயிரத்து 755 பேர் கொரோனா வைரஸ் நோய்க்கு உயிரிழந்துள்ளனர். கொரோனா காரணமாக, தற்போது நகரில் 667 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. 6 ஆயிரத்து 173 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.