விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,582 ஆக உயர்வு

தமிழகத்தில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 51,366 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 6091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 10,860 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இதில் 3164 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 7 சிறப்பு மையங்களில் 380 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இந்த மாவட்டத்தில் 491 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்றைய பாதிப்பில் சிவகாசியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டவர்களும், ராஜபாளையத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்களும், சாத்தூரை சேர்ந்த 30 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த 45 பேரும், வெம்பக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த 60 பேரும் அடங்குவர். இதன் மூலம் இந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6,582 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று தெரிவிக்கப்பட்ட 491 முடிவுகளில் 202 முடிவுகள் மதுரை தனியார் பரிசோதனை மையத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை மையத்தில் கடந்த 22-ந்தேதி சோதனை மாதிரிகள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் 4 நாட்களுக்கு பின்னர் நேற்று தான் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

சோதனை மாதிரிகள் கடந்த 22-ந்தேதிக்கு முன்னரே எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் முடிவுகள் தெரிய 6 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில் நோய் பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் 10 ஆயிரம் பேருக்கு முடிவுகள் தெரிய வேண்டிய நிலையில் இதே நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் பாதிப்பு எண்ணிக்கை அடுத்த வாரம் 10 ஆயிரத்தை கடந்து விடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.