மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் ஆனவர்களின் எண்ணிக்கை 10,452 ஆக உயர்வு

மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 452 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் மதுரையில் நேற்று 107 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 80 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 5 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 463 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 334 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். 380 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும், 83 பேர் தனியார் மருத்துவமனையிலும் குணமடைந்தனர். இவர்களுடன் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 452 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1265 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இதனிடையே மதுரையில் நேற்று ஒரே நாளில் 6 பேர் கொரோனா பாதிப்பால் இறந்தனர். இதனால் மதுரையில் இதுவரை கொரோனாவுக்கு 288 பேர் பலியாகி உள்ளனர்.