இடுக்கி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை குறைவு

கேரளா: பெரியாறு அணை நீர்த்தேக்கத்தில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. கடும் கோடை வெயில் காரணமாகவும் தேக்கடி பகுதியில் நீர்வரத்து குறைந்துள்ளதாலும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உள்ளூர் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய முக்கிய பகுதியாக உள்ளது தேக்கடி. தேக்கடியில் அடர்வன பகுதிக்கு நடுவே உள்ள ஏரியில் படகு சவாரி செய்து வனவிலங்குகளை ரசிப்பதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

தேனி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களை கண்டு ரசித்த பின் தேக்கடி பகுதிக்கு நிச்சயம் சுற்றுலாவிற்காக செல்வர்.

முல்லைப் பெரியாறு அணை நீர் தேக்கத்தில் தேக்கடி பகுதியில் இருந்து கேரள வன துறை மற்றும் சுற்றுலா துறைக்கு சொந்தமான 10 க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படுகின்றன. இங்கு இருந்து இயக்கப்படும் படகு சவாரியில் செல்லும்பொழுது நீர் அருந்த வரும் வனவிலங்குகளை கண்டு ரசிப்பதற்காகவே உள்நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு வருவர்.

ஆனால் தற்போது கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் முல்லைப் பெரியாறு அணை நீர்த்தேக்கத்தில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. கடும் கோடை வெயில் காரணமாகவும் தேக்கடி பகுதியில் நீர்வரத்து குறைந்துள்ளதாலும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உள்ளூர் பகுதி மக்கள் கூறினர்.