தங்க கடத்தல் விவகாரத்தை வெளிக் கொண்டு வந்த அதிகாரி பணியிட மாற்றம்

பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் சர்ச்சை... கேரள அரசியலில் புயலை கிளப்பிய தங்க கடத்தல் விவகாரத்தை வெளிக்கொண்டு வந்த அதிகாரி, நாக்பூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்சின் துாதரகத்தின் பெயரில், தங்கம் கடத்தப்பட்டது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, துாதரகத்தில் பணியாற்றி வந்த சரித், முன்னாள் ஊழியரான ஸ்வப்னா சுரேஷ், அவருடைய கூட்டாளி சந்தீப் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் முதல்வரின் முதன்மை செயலர் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை செயலராக இருந்த, சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து, அவர் இந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தங்க கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இந்நிலையில், தங்க கடத்தல் விவகாரத்தை, வெளிக்கொண்டு வந்த, சுங்கத்துறை அதிகாரி, அனிஸ் பி.ராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவனந்தபுரம் விமான நிலைய சுங்கத்துறை துணை கமிஷனராக இருந்த அவர், தற்போது நாக்பூருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது வழக்கமான பணியிட மாற்றம் என சுங்கத்துறை விளக்கமளித்த போதும், இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.