இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

திருநெல்வேலியின் புகழ் பெற்ற பிரபல இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் கொரோனா உறுதியானதால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லையில் உள்ள புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் ஹரிசிங். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, சமீபத்தில் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் மருமகனுக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.

இதனையடுத்து அவரது வீட்டில் கிருமி நாசினி தெளிக்க மாநகராட்சி பணியாளர்கள் சென்றனர். அதற்குள், ஹரிசிங் தனது வீட்டினுள் தூக்குபோட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் தனக்கு கொரோனா இருப்பது பற்றி தெரியவந்தால் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.