விமான விபத்தில் இறந்த விமானி விமானப்படையில் பணியாற்றியவர்

கோழிக்கோட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் இறந்த விமானி விமானப்படையில் பணியாற்றியவர் என்று தெரிய வந்துள்ளது.

கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக் கொண்டு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி, துணை விமானி உள்பட இதுவரை 18 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த விமானி விங் காமாண்டர் தீபக் வி சாத்தே ஆவார். இவர் இந்திய விமானப்படையில் போர் விமானத்தை இயக்கியவர். தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர்.

இவர் போயிங் 737 விமானத்தை நன்றாக இயக்கும் அனுபவம் பெற்றவர் எனக் கூறப்படுகிறது.

ஐதராபாத் விமானப்படை அகாடமியில் ஸ்வார்டு ஆஃப் ஹானர் பெற்றவர். மிகவும் தொழில்முறை விமானி. 58 என்.டி.ஏ. பிரசிடென்ட் தங்க பதக்கம் வென்றவர். பயணிகள் விமானத்திற்கு வருவதற்கு முன் சிறந்த போர் விமானியாக இருந்தார்.

துணை விமானி அகிலேஷ் குமாருக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடைபெற்றுள்ளது. FlightRadar24 இணையதளத்தில் விமானம் தரையிறங்குவதற்கு முன் பல முறை வானில் வட்டமிட்டு இரண்டு முறை இறங்க முயற்சி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.