அண்ணாமலையின் பதவி பறிபோகும் என எதிர்பார்த்தவர்களுக்கு பிரதமர் கொடுத்த ஷாக்

புதுடில்லி: அதிமுக கூட்டணி முறிந்ததும் அண்ணாமலை பதவி பறிபோகும் என்று நினைத்தவர்கள் அனைவரும் அப்செட் என்றால் மிகையில்லை.

பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி முறிந்ததும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை புதுடில்லி சென்றார். அவருடைய பதவி பறி போய்விடும் என, தமிழக பா.ஜ., சீனியர்கள் ஆவலாக காத்திருந்தனர்; புதிய தலைவர் வானதி சீனிவாசன் என்றெல்லாம் செய்திகள் அடிபட்டன; ஆனால், அண்ணாமலையை அசைக்க முடியவில்லை.

பல தமிழக பா.ஜ., தலைவர்கள் அண்ணாமலையைப் பற்றி தேசியத் தலைவர் நட்டாவிடம் புகார் அளித்தனர். அ.தி.மு.க., கூட்டணி முறிவிற்கு காரணமான அண்ணாமலையை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பது தான் இவர்களது புகார்.'இவர்களுக்கு வேறு வேலையே இல்லை... எப்போதும் புகார் பட்டியல் தருவது ஒன்று தான் வேலை...' என, சலித்துக் கொண்டாராம் நட்டா.

அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பதை கட்சி மேலிடமும், பிரதமர் மோடியும் நன்றாக அறிந்துள்ளனர் என்கின்றனர். பா.ஜ., தமிழகத்தில் வளர இந்த யாத்திரை உதவும் என்பதும் இவர்களது கருத்து.-'தி.மு.க.,விற்கு எதிராக தீவிரமாக செயல்படுங்கள்.

அவர்களுடைய ஊழலைப் பற்றி, புள்ளி விபரங்களுடன் வெளியிடுங்கள்; உங்களுக்கு உதவ கட்சி மேலிடம் எப்போதும் தயாராக இருக்கும். கூட்டணி பற்றியோ, அ.தி.மு.க.,வைப் பற்றியோ எதுவும் பேச வேண்டாம்...' என, பிரதமர் மோடி, அண்ணாமலையிடம் கட்டளையிட்டதாக பா.ஜ., வட்டாரங்களில் பேசப்படுகிறது.'பிரதமர் மோடியைப் பொறுத்தவரை, ஒருவர் மீது அவர் நம்பிக்கை வைத்துவிட்டால், கடைசி வரை அந்த நபருக்கு ஆதரவு தருவார். அந்த நபர், தேர்தலில் தோற்றாலும், அதைப் பற்றி கவலைப்பட மாட்டார்; தொடர்ந்து ஆதரிப்பார்.

இது தான் மோடியின் குணம்...' என, மூத்த தலைவர்கள் சொல்கின்றனர். அண்ணாமலை மீது மோடி அதிக நம்பிக்கை வைத்துள்ளார்; எனவே, இவருக்கு எதிராக எத்தனை புகார்கள் வந்தாலும் எதுவும் எடுபடாதாம்.