முகக்கவசம் அணியாமல் கடைக்கு வந்த பிரதமரின் தந்தை

முகக்கவசம் அணியாமல் வந்த பிரதமரின் தந்தை... முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதத் தொகையை இரட்டிப்பாக்கி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்ட நிலையில், அவரது தந்தை முகக்கவசம் அணியாமல் கடைக்கு வந்திருந்த புகைப்படம் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

ஸ்டான்லி ஜான்சன் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தித்தாள்கள் விற்பனை செய்யும் கடைக்கு முகக்கவசம் அணியாமல் வந்திருந்த புகைப்படம் மெட்ரோ செய்தித்தாளில் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஸ்டான்லி ஜான்சன் கூறுகையில், மூன்று வாரங்களாக வெளிநாட்டில் இருந்து, திரும்பியதால் விதிமுறைகளை அறியாமல் செய்துவிட்டேன். ஆனால் தெரியாமல் செய்தாலும் விதிகளை மீறியதற்கு மன்னிப்பு அளிக்க முடியாது என்ற வழக்குமொழியைக் குறிப்பிட்டார்.

கடந்த ஜூலை 24-ம் தேதி முதல், பிரிட்டனில் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் போதும், கடைகளுக்கு வரும்போதும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக முகக்கவசம் அணியாமல் பிடிபடும் நபர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதத் தொகை 200 பௌண்டுகளாக கடந்த வாரம் முதல் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.