அஜ்மானில் கொரோனா ‘லேசர்’ பரிசோதனை மையத்தை அஜ்மான் பட்டத்து இளவரசர் தொடங்கி வைத்தார்

அமீரகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, அஜ்மானில் விரைவாக கொரோனா பரிசோதனை செய்யும் வகையில் கொரோனா ‘லேசர்’ பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் வடக்கு பகுதிகளில் இத்தகைய நவீன பரிசோதனை மையம் முதலாவதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் செயல்படும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. 50 திர்ஹாம் செலவில் 3 நிமிடத்தில் இந்த பரிசோதனைகள் செய்யப்படும். 20 கவுண்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மையத்தில் தினமும் 6 ஆயிரம் முதல் முதல் 8 ஆயிரம் பேர் வரை பரிசோதனை செய்யும் வகையில் வசதி உள்ளது. இந்த கொரோனா பரிசோதனை மையத்தை அஜ்மான் பட்டத்து இளவரசர் ஷேக் அம்மார் பின் ஹுமைத் அல் நுயைமி நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது இளவரசர் ஷேக் அம்மார் பின் ஹுமைத் அல் நுயைமி பேசுகையில், அஜ்மான் பகுதியில் கொரோனா பரிசோதனையை விரைவுப்படுத்தும் வகையில் நவீன ‘லேசர்’ உதவியுடன் மேற்கொள்ளப்படும் பரிசோதனை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பரவுவது முற்றிலுமாக தடுக்கப்படும் என்று கூறினார். மேலும் இளவரசர் ஷேக் அம்மார் முதல் ஆளாக தனக்கு கொரோனா பரிசோதனையை செய்து கொண்டார்.

இளவரசருடன் வந்தவர்களும் இந்த பரிசோதனையை செய்து கொண்டனர். இந்த புதிய கொரோனா ‘லேசர்’ பரிசோதனை மையத்தின் பணிகள் குறித்து அந்த மையத்தின் திட்ட இயக்குனர் அப்துல்லா அல் ரஷிதி பட்டத்து இளவரசருக்கு கூறினார். இந்த புதிய மையத்தின் திறப்பு விழாவில் அஜ்மான் அரசின் சுகாதாரத்துறை உள்பட பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர்.