வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

மீண்டும் தொடங்கப்பட உள்ளது... வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை, கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி, வெளிவிவகார அமைச்சு இடைநிறுத்தியது.

இந்நிலையில் இவ்வியடம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை, அடுத்த வாரம் முதல் கட்டம் கட்டமாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு உட்பட வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களையே இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வருவதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்தமையினால் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் குறைந்த இடவசதி காணப்பட்டமையும் இதற்கு காரணமாகும்.

அத்துடன்,வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்படவுள்ள இலங்கையர்கள் அனைவரும், 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.