லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம்... டெல்லி போலீசார் வழக்குப்பதிவு

புதுடெல்லி: லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு கடந்த 19ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மாநிலமான பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக பிரித்து காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு உருவாக்க வேண்டும் என்று வெளிநாடு வாழ் பஞ்சாபிகள் சிலர் முயற்சித்து வருகின்றனர். அம்ரித்பால் சிங் இந்தியாவில் அவர்களின் ஆதரவில் தீவிரமாக இருந்தார்.

சீக்கிய மதகுருவான அவர் மீதான வழக்குகள் தொடர்பாக போலீசார் கைது செய்ய முயன்றபோது அவர் தப்பியோடிவிட்டார். இருப்பினும் அவரை கைது செய்வதில் பஞ்சாப் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

லண்டனில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் அம்ரித்பால் சிங் மீதான காவல்துறை நடவடிக்கையை கண்டித்து அங்குள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, தூதரகத்தில் பறந்து கொண்டிருந்த இந்திய தேசியக் கொடியை கீழே இறக்கினர். மேலும், காலிஸ்தான் கொடியை கையில் ஏந்தியவாறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு போதிய பாதுகாப்பு இல்லாததால், அதற்கு பதிலடியாக புதுதில்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகத்திற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றினர்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலர் ஜேம்ஸ் கிளவர்லி, “லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீது நடத்தப்பட்ட வன்முறை கண்டிக்கத்தக்கது. லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தப்படும்,” என்றார்.

இதற்கிடையில், லண்டனில் நடந்த சம்பவம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதையடுத்து, டெல்லி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.