வால்பாறையில் கோடை வெயிலை போக்கி குளுமையை கொடுத்துள்ளது தொடர் மழை

வால்பாறை பகுதில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடைமழை வெயிலின் தாக்கத்தை குறைத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சோலையாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

வால்பாறையில், கடந்த, 15 நாட்களாக கோடை மழை பரவலாக பெய்கிறது. நேற்று வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் காற்றுடன் மழை பெய்தது.

இதனால், பல்வேறு எஸ்டேட் பகுதியில் மரங்கள் சாய்ந்தும், வீடுகளின் மேற்கூரை காற்றுக்கு பறந்தும் பாதிப்புகள் ஏற்பட்டன. ஜூன் மாதம் பருவமழை துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போத வால்பாறையில் பெய்யும் கோடை மழை மக்களுக்கு குளுமையை கொடுத்துள்ளது.

இந்நிலையில், மேல்நீராறு அணையில் இருந்து வினாடிக்கு, 30 கனஅடி தண்ணீரும், கீழ்நீராறு அணையில் இருந்து வினாடிக்கு, 20 கனஅடி தண்ணீர் வீதம், சோலையாறு அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், சோலையாறுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

சோலையாறு அணையின், 160 அடி உயரத்தில், நேற்று காலை, 45.24 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 57 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. வால்பாறை நகரில், 17 மி.மீ., மழையளவு பதிவானது.