கொரோனா பரவல் அபாயம் குறையவில்லை; விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தகவல்

கொரோனா பரவல் அபாயம் குறையவில்லை... இலங்கையில் கொரோனா சமூகத்தில் இனங்காணப்படுவது முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

புதன்கிழமை ரஷ்யாவிலிருந்து வந்த விமானத்திலுள்ள பணியாளர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. எனினும் இவருடன் வந்தவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குச் செல்லாமல் நேரடியாக மாத்தளை பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். சம்பவம் குறித்த தகவல் கிடைக்கப் பெற்றவுடன் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது பாரதூரமான விடயம் கிடையாது. எனினும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்ய வேண்டியது கட்டாயமாகும். இதில் இராஜதந்திரிகளுக்கு அவர்களது சொந்த தங்குமிடங்களிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து வரும் பெரும்பாலானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படுவதால் நாட்டில் வைரஸ் பரவும் அபாயம் குறைவடையவில்லை.

எனவே பொது மக்களை அடிப்படை சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் இதன்போது கூறினார்.