தேனி மாவட்டத்தில் முழு பொது முடக்கத்தால் சாலைகள் வெறிச்சோடின

சாலைகள் வெறிச்சோடியது... தேனி மாவட்டத்தில் முழு பொது முடக்கத்தை முன்னிட்டு வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேனி, பழனிசெட்டிபட்டி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன.

இந்தநிலையில், அரசு உத்தரவின்படி மாவட்டத்திற்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் சனிக்கிழமை நள்ளிரவு முதல் முழு பொது முடக்கம் அமலுக்கு வந்துள்ளது.

இதனால் தேனி, பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

நகராட்சிப் பகுதிகளில் உள்ள அம்மா உணவகம் மற்றும் மருந்துக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. கிராமப் பகுதிகளிலும் பொதுமக்கள் நடமாட்டமின்றி தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாததால் விவசாயப் பணிகளும் முடங்கியுள்ளது.

பொதுமக்கள் தாமாக முன்வந்து முழு பொது முடக்கத்திற்கு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், திங்கள்கிழமை காலை 6 மணி வரை முழு பொது முடக்கம் அமலில் இருக்கும் என்றும் காவல்துறையினர் கூறினர்.