ஜனவரி முதல் வாரத்தில் செயற்கைகோள் பயன்பாட்டிற்கு வரும்- இஸ்ரோ விஞ்ஞானிகள்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீ‌‌ஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து கடந்த 17-ம் தேதி மாலை 3.41 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் நம் நாட்டுக்கு சொந்தமான சி.எம்.எஸ்-01 என்ற தகவல்தொடர்பு செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்ட இலக்கில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைகோளை, தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடியே செயற்கைகோள் செயல்படவேண்டிய உயரத்துக்கு கொண்டு சென்று விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:- பூமியில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்கள், 12 வினாடிகளில் தகவல்தொடர்பு செயற்கைகோளை பூமியில் இருந்து 545 கிலோமீட்டர் உயரத்தில் திட்டமிட்ட இலக்கில், அதாவது நீள்வட்ட துணை- ஜியோசிங்ரோனைஸ் டிரான்ஸ்பர் என்ற சுற்றுப்பாதையில் ராக்கெட் நிலைநிறுத்தியது. உடனடியாக செயற்கைகோளில் பொருத்தப்பட்டிருந்த சூரியசக்தி தகடுகள் செயல்படத் தொடங்கின. அதைத் தொடர்ந்து, ஹாசனில் உள்ள இஸ்ரோவின் மாஸ்டர் கட்டுப்பாட்டு மையம் செயற்கைகோளின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது.

அதன்பின், செயற்கைகோள் செயல்படுவதற்காக நியமிக்கப்பட்ட, புவிசார் சுற்றுப்பாதையில் அதை நிலைநிறுத்துவதற்காக சுற்றுப்பாதை உயர்த்தும் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். தற்போது அந்த பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளது. தகவல்தொடர்பு தரவுகளை பெறுவதற்கான ஆரம்பகட்ட செயல்பாடுகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. தரவுகளை அளிக்கும் வகையில் செயற்கைகோள் பிரதிபலிப்பானும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயற்கைகோளின் மூலம், நவீன வசதிகளுடன் தொலைநிலைக்கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, சி-பாண்டு அலைவரிசை உள்ளிட்டவற்றுக்கான தரவுகளை பெற முடியும். வருகிற ஜனவரி முதல் வாரத்தில், செயற்கைகோள் சுற்றுப்பாதைக்கான சோதனைகள் முடிந்ததும் தகவல்தொடர்பு சேவை பயனாளிகளின் பயன்பாட்டிற்கு இந்த செயற்கைகோள் வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.