உடனடியாக தங்களுக்கு பணி ஆணைகளை வழங்க வேண்டும் என்று சிறப்பாசிரியர்கள் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு சிறப்பாசிரியர் ஓவியம், தையல்,இசை, உடற்கல்விக்கான சிறப்பாசிரியர் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. அதன் பின் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து இதில் 20% தமிழ் வழி இட ஒதுக்கீடு மூலமாக தேர்ச்சி பெற்றவர்களும் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் தமிழ் வழி இட ஒதுக்கீடுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.அதனால் 20% தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்றவர்களை தவிர மற்ற அனைவருக்கும் பணி ஆணைகள் வழங்கப்பட்டது.

இதனையடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவில், தமிழ்வழி இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. ஆனால் இன்னும் 20% தமிழ் வழியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னும் பணி ஆணைகள் வழங்கப்படாமல் உள்ளது. இவ்வாறு பணி நியமனம் செய்யப்படாததால் சிறப்பாசிரியர் பணியிடங்களில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் வருட கணக்கில் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

மேலும் அதிகரித்து வரும் பண வீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் தங்களின் குடும்ப நலன் கருதி இது தொடர்பாக அரசு பரிசீலனை மேற்கொண்டு விரைவில் முடிவுகளை எடுக்க வேண்டும் என சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் பெறாதவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அத்துடன் தங்களின் குடும்ப நலன் கருதி விரைவில் தங்களுக்கு பணி ஆணைகளை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கும் சிறப்பாசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.