பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க டோக்கன் வழங்கும் பணி மும்முரம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி இன்று காலை தொடங்கியது

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை ஏழை எளிய மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரேஷன் கார்டுகளுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுகரும்பு, ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது.

அந்த வகையில் வருகின்ற ஒன்பதாம் தேதி பொங்கல் பரிசு வழங்க உள்ளதை அடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,81,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 407 ரேஷன் கடைகள் மூலம் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் முதல் கட்டமாக மயிலாடுதுறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர். ஒவ்வொரு ரேஷன் கடையிலும் ஒரு நாளைக்கு 50 கார்டுகளுக்கு பொருட்கள் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டு டோக்கனில் தேதி குறிப்பிடப்பட்டு வழங்கும் பணி இன்று தொடங்கியது.

மயிலாடுதுறை நகராட்சி கொத்தத்தெருவில் பொதுமக்களுக்கு டோக்கன் வாங்கும் பணியை நகராட்சி தலைவர் குண்டாமணி செல்வராஜ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் மாவட்டம் முழுவதும் பொங்கல் பரிசு தொகைக்காக டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.