தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும்

சென்னை: சென்னை உள்பட 12 இடங்களில் வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்தது ..... வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து தீவிர புயலாக உருவாகியது. இந்த புயலுக்கு மோக்கா என பெயரிடப்பட்டது. இந்த மோக்கா புயல் வங்காளதேசம் மற்றும் மியான்மரை நேற்று தாக்கியது. இப்புயலின் காரணமாக சுமார் 240 கி. மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.

மேலும் மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனை அடுத்து இப்புயலானது நேற்று நண்பகலில் கரையை கடந்தது. இந்நிலையில் தமிழகத்தில் வெப்பநிலையானது அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இயல்பான வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து தற்போது தமிழகத்தில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. இந்த வெப்பநிலை வரும் நாட்களில் 41 ஆக உயரும். இதனால் கோடை வெயில் பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவேபொதுமக்கள் மதிய நேரத்தில் வெளியில் தேவையில்லாமல் நடமாட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தண்ணீர் அதிகமாக குடித்து வெயிலுக்கு தகுந்த உணவை உண்டு உடலை காக்க வேண்டியது அவசியமான ஒன்று.