திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ அனுமதி வழங்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்போருக்கு என இஸ்லாமிய சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. மிக கடுமையாக உள்ள இந்த சட்டங்களில் தற்போது ஆச்சரியமளிக்கும் வகையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. நாட்டின் பொருளாதாரம் ஊக்குவிக்கப்படவும் மற்றும் சமூக நிலைப்பாட்டிற்காகவும் இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்படி, திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ, மதுபானம் அருந்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. எனினும், இஸ்லாமிய தனிநபர் சட்டத்தின்படி ஆணவ கொலை குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் சுதந்திரங்களை விரிவாக்கம் செய்து இருப்பதனால், அந்நாடு சுற்றுலா பயணிகளுக்கு மேற்கத்திய அனுபவம் கிடைக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு முன்பிருந்த கடுமையான இஸ்லாமிய சட்டத்தின்படி, வெளிநாட்டினர் நீதிமன்ற வழக்குகளை சந்திக்க வேண்டியிருந்தது.

அமீரக பார்கள் மற்றும் கிளப்களில் மதுபானம் கிடைக்கும் என்றாலும் தனிநபர் ஒருவர் மதுபானம் வாங்கவோ, எடுத்து செல்லவோ அல்லது வீட்டில் வைத்திருப்பதற்கோ அரசு அங்கீகாரம் பெற்ற உரிமம் வைத்திருக்க வேண்டும். இந்த புதிய தளர்வுகளின்படி, உரிமம் வைத்திருக்க தடை விதிக்கப்பட்ட முஸ்லிம்களும் இனி சுதந்திரமுடன் அந்த சலுகைகளை அனுபவிக்கலாம்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மேக்நமரா என்ற பெண், அமீரகத்தின் சகிப்புதன்மைக்கான மந்திரி ஷேக் நாகியான் பின் முபாரக் அல் நாகியான் என்பவர் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த சட்ட தளர்வுகளால் அமீரகத்தில் வசிக்கும் 84 லட்சம் வெளிநாட்டவர்கள் இனி திருமணம், விவாகரத்து மற்றும் வாரிசு உரிமை போன்ற விவகாரங்களில் இஸ்லாமிய ஷரியா நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டியிருக்காது.