பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வீடியோ பொய் என விளக்கம்

பீகார்: அது பொய் தகவல் என விளக்கம்... தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வீடியோ குறித்து அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் பணியாற்றும் பீகாா் இளைஞா்கள், உள்ளூா் மக்களால் தாக்கப்படுவதுபோல இரு விடியோக்கள் சில நாள்களாக சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வந்தது. முக்கியமாக இந்த விடியோக்கள் பிகாா், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வேகமாக பரவியது. இதனால் அந்த மாநிலங்களில் வசிக்கும் மக்களிடம் தவறான எண்ணம் ஏற்படும் நிலை ஏற்பட்டது.

இதையறிந்த தமிழக காவல்துறை, அந்த வீடியோக்களுக்கு மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வீடியோ குறித்து அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இன்று விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வீடியோக்கள் போலியானவை.

பீகாரைச் சேர்ந்த ஒருவர் வெளியிட்டுள்ள விடியோக்கள் போலி என தமிழக டிஜிபி விளக்கமளித்துள்ளார். வதந்திகளைப் பரப்புவதே பாஜகவின் வேலை. அவர்கள் ஏன் தவறாக வழிநடத்துகிறார்கள்? இதுபோன்ற சம்பவம் நடந்தால் எங்கள் அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இதனிடையே பீகார் தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியதால் வடமாநிலத் தொழிலாளர்கள் இன்று திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.