வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று புயலாக மாறியது. புரெவி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று இரவு பாம்பன்- கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருச்சி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. வேப்பந்தட்டை பகுதியில் இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை நீடித்தது. இந்த நிலையில் வேப்பந்தட்டை பசுந்தளிர் கிராமத்தில் நள்ளிரவு வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 7 வயது சிறுமி யோஜனா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

தாய் மற்றும் 2 குழந்தைகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். மழையில் நனைந்து சுவர் இடிந்து விழுந்ததாக கூறப்பட்டது. தகவல் அறிந்த வி. களத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் தாசில்தார் கிருஷ்ணராஜ் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார்.