மேட்டூர் அணைக்கு தொடரும் நீர்வரத்து காரணமாக அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று முன்தினம் 6 ஆயிரத்து 559 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையில் 6 ஆயிரத்து 119 கன அடியாக சரிந்தது. இன்று மேலும் குறைந்து விநாடிக்கு 5 ஆயிரத்து 957 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதேபோல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

நேற்று காலை 101.58 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 8.00 மணிக்கு 101.88 அடியாக அதிகரித்தது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.