போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளைஞர்கள்... ஹெல்மெட் அணியாததால் சர்ச்சை

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது பிறந்தநாள் கொண்டாட்டமானது சென்னை நந்தனம் அருகில் உள்ள தேவர் சிலை அருகே நடைபெற்றது. இந்த பிறந்தநாள் விழாவில் பல்வேறு அமைப்பினரும், பொது மக்களும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி வந்தனர்.

நந்தனம் வழியே செல்லும் அண்ணாசாலையில், அதிக ஒலி எழுப்பிக்கொண்டு உயர் தர இருசக்கர வாகனங்களில் தலைகவசம் அணியாமல் தலா 3 பேராக இளைஞர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

அதனைக் கண்ட காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி, மெதுவாக செல்லுமாறு அறிவுரை கூறியபோது, தாங்கள் என்ன கேஸ் போடுவீர்களா? என கூட்டத்தில் இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், போலீசார், வாகனத்தில் வந்த இளைஞர்களை பிடித்தும் அவர்களின் இரு சக்கர வாகனங்களை பறிமுதலும் செய்தனர்.

இந்நிலையில், வாகனங்களை பறிமுதல் செய்ததற்கான சரியான காரணத்தை கேட்டபோது, புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி தலைகவசம் அணியாததால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது என காவல்துறை தரப்பிலிருந்து விளக்கமளித்தனர். இளைஞர்கள் நீண்ட நேரமாக காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் ரெகவர் வேன் வரவே, வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர்களும், அவர்களுக்கு சிபாரிசு செய்ய வந்த அமைப்பினரும் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர்.
சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் நரேந்திர நாயர், துணை ஆணையர் தேஷ்முக் சேகர் மற்றும் உதவி ஆணையர்கள் அங்கு வருகை தந்து இளைஞர்களை மன்னிப்பு மட்டும் கேட்க வைத்து வழக்குகள் எதும் பதிவிடாமல் அவர்களின் வாகனங்களை ஒப்படைத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.