பெரிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது; அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்

பெரிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது... உத்தரப் பிரதேச தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் எடாவா நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அகிலேஷ் யாதவ் தெரிவித்ததாவது:

சிறிய கட்சிகளைப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்கு சாத்தியமில்லை. சிவபால் யாதவ் கட்சியைக் கூட பொறுத்துக் கொள்வோம். ஜஸ்வந்த் நகர் சிவபால் யாதவ் தொகுதி. சமாஜவாதி அந்தத் தொகுதியை அவருக்கு ஒதுக்கியது.

வரும் காலங்களில் அந்தக் கட்சித் தலைவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும். இதைவிட வேறு என்ன வேண்டும். உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் சகோதரர் சிவபால் யாதவ். 2017 பேரவைத் தேர்தலில் ஜஸ்வந்த் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதையடுத்து, கட்சிக்குள் எழுந்த பிரச்னை காரணமாக பிரகதிஷீல் சமாஜ்வாதி என்ற கட்சியைத் தொடங்கினார். 2019 மக்களவைத் தேர்தலில் சொந்த சின்னத்தில் ஃபிரோசாபாத்தில் போட்டியிட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் 2022-ம் ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.