சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவது அரசின் கொள்கை முடிவு என்றும், அரசு கொள்கை முடிவை எடுத்த பிறகு நீதிமன்றத்தில் அனுமதி பெற தேவையில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

சாத்தான் குளத்தில் ஜெயராஜ் , மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு நீதிமன்ற அனுமதியுடன் மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதையடுத்து , சாத்தான் குளம் வழக்கை சிபிஐக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவது அரசின் கொள்கை முடிவு என்றும், அரசு கொள்கை முடிவை எடுத்த பிறகு நீதிமன்றத்தில் அனுமதி பெற தேவையில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதன் மூலம் , சாத்தான் குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.