எந்த தவறும் இல்லை; குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்த அமைச்சர்

அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசியதில் தவறொன்றும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கே இப்படி ஒரு விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 21ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் அமித் ஷா கலந்துகொண்டு புதிய திட்டங்களைத் தொடங்கிவைத்தார். அப்போது பேசிய துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம், “வருகிற சட்டமன்றத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி தொடரும்” என்று அறிவித்தார்.

அரசு விழாவை அதிமுக - பாஜக கூட்டணி அறிவிப்பு விழா போல நடத்தியதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அரசு விழாவில் கூட்டணியை அறிவிக்க வேண்டிய நிர்பந்தத்தில் அதிமுக இருப்பதாகவும் சாடினர்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பது போல உள்ளது அவர்களின் குற்றச்சாட்டு. திமுக எத்தனையோ அரசு நிகழ்ச்சிகளில் அரசியல் பேசியிருக்கிறது. அரசு நிகழ்ச்சி என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை” என்றார்.

மேலும், “அரசியல் இல்லாமல் எந்த விஷயமும் இல்லை. உலகம், நாடு, மாநிலம், மனிதர்கள் என நாம் அனைவரும் அரசியலைச் சார்ந்துதான் இயங்கிக் கொண்டிருக்கிறோம். ஆகவே, அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசியதில் தவறொன்றும் இல்லை” என்றும் விளக்கினார் ஜெயக்குமார்.