ஆலங்கட்டி மழை பெய்தது... மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள்

சென்னை: சென்னையில் நேற்று சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஒரு வாரத்திற்கு மிதமான மழை முதல் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென மதியம் மூன்று மணி அளவில் சென்னையின் பல பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்ததால் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. அதன்படி மழை வெளுத்து வாங்கியது.

வடகிழக்கு பருவமழை நெருங்குவதையொட்டி, சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று மாலையும் மழை கொட்டி தீர்த்தது. சுமார் அரை மணி நேரம் விடாது பெய்த மழையால் சாலைகள் முழுவதும் மழைநீரால் சூழ்ந்தது. திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

சாலைகள் முழுவதும் ஐஸ்கட்டிகள் கிடந்ததால் சென்னையே வெப்பம் தணிந்து குளுமையாக மாறியது. சென்னை கிண்டி, அசோக் பில்லர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், அடையாறு, சைதாபேட்டை, தி.நகர், பல்லாவரம், ஆவடி உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று ஆலங்கட்டி மழை பெய்தது. குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் வானத்தில் இருந்து கொட்டிய ஐஸ்கட்டிகளை பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.