தமிழகத்தில் முழு நேர மின் தடை செய்யப்பட மாட்டாது

சென்னை: தமிழகத்தில் 2022 – 2023 ம் கல்வியாண்டு நிறைவடையவுள்ள நிலையில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. வரும் 13ம் தேதி முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. இதற்கு அடுத்ததாக 11ம் வகுப்பிற்கு மார்ச் 14ம் தேதியும் அதனை தொடர்ந்து, 10-ம் வகுப்பிற்கு ஏப். 3 -ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளது.

இதனை அடுத்து தற்போது 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை பொதுத்தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் மாணவர்கள் தீவிரமாக தேர்வை எழுத தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவர்கள் படிக்க ஏதுவாக அனைத்து பகுதிகளிலும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதையடுத்து இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை கடிதம் ஒன்றை மின் வாரியத்திற்கு அனுப்பியுள்ளது. இதனடிப்படையில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் முழு மின் விநியோகம் தடை இருக்காது என மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் சில பகுதியில் பழுது நீக்க பணி காரணமாக சிறிது நேரம் மட்டும் மின் விநியோகம் தடை செய்யப்படும், பணிகள் நிறைவடைந்த பிறகு சீரான மின் விநியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.