திட்டமிட்டு சோதனை நடத்துகின்றனர்... திமுக அமைப்பு செயலாளர் கண்டனம்

சென்னை: திட்டமிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை கரூரில் உள்ள அவரது வீடுகளில் மத்திய துணை ராணுவப் படையினரின் பாதுகாப்பில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

5 வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் அவரது சகோதரர் அசோக் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம் மற்றும் அபிராமபுரத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழக பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரையடுத்து இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்துக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் உள்ளிட்ட நிர்வாகிகள் வருகை தந்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது , திட்டமிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை .

அண்ணாமலை விவகாரத்தை திசை திருப்பவே அமைச்சரின் வீட்டில் சோதனை. மனித உரிமைகளை மீறும் வகையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக – பாஜக இடையே மோதலை திசை திருப்பும் வகையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.