ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய கலைப்பொருட்களை எடுத்து சென்றனர்... காவல்துறை தகவல்

இலங்கை: இலங்கை அதிபர் மாளிகை மற்றும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து அரிய கலைப்பொருட்கள், பழங்கால பொருட்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட பொருட்கள் காணவில்லை. இதை போராட்டக்காரர்கள் எடுத்துச் சென்றிருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடும் இன்னல்களை அனுபவித்து வரும் பொதுமக்கள், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 9ம்தேதி, அதிபர் கோத்தபய பதவி விலக வலியுறுத்தி அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.

பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்ததால் அவர்களை பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதிபர் மாளிகையை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் அங்குள்ள பொருட்களை எடுத்து பயன்படுத்தினர். இதேபோல் பிரதமர் இல்லத்தையும் ஆக்கிரமித்தனர். ஒரு கட்டடத்திற்கு தீ வைத்தனர்.

இது தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிபர் மாளிகை மற்றும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து அரிய கலைப்பொருட்கள், பழங்கால பொருட்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட பொருட்கள் காணாமல் போனதாகவும், அவற்றை போராட்டக்காரர்கள் எடுத்துச்சென்றிருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்ட விசாரணையில் இந்த தகவல் தெரியவந்திருக்கிறது. ஆனால், இது தொடர்பாக விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே, போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான உரிமையை மதிப்பதாகவும், அதேசமயம், அதிபர் மாளிகை அல்லது பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் போன்ற அரசு கட்டடங்களை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது என்றும், அதிபர் ரணில் விக்கிரமசிங்க கூறி உள்ளார்.