திமுக பிரசாரத்தை தொடங்கியதற்கு காரணம் இதுதான்; பாஜ மாநில தலைவர் விளக்கம்

பாஜ., மாநில தலைவர் கருத்து... திமுக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது தொடர்பாக எல்.முருகன் கருத்து தெரிவித்தார்.

சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து பாஜகவின் சார்பில் கடந்த 6ஆம் தேதி திருத்தணியில் வேல் யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. பல இடங்களில் வேல் யாத்திரை நடப்பதற்கு முன்பாகவே பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோரை காவல் துறையினர் கைது செய்து மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுவித்தனர்.

நிவர் புயலின் காரணமாக வரும் நாட்களில் நடைபெற இருந்த வேல் யாத்திரை நிகழ்வுகள் ரத்துசெய்யப்படுவதாக அறிவித்த எல்.முருகன், இறுதி நிகழ்வு மட்டும் திருச்செந்தூரில் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று (நவம்பர் 27) டெல்லி சென்ற எல்.முருகன், தேசிய பாஜக அலுவலகத்தில் பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “பாஜகவின் வேல் யாத்திரைக்கு முருக பக்தர்கள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பு இருக்கிறது. நிவர் புயலால் பெரிய பாதிப்புகள் ஏற்படும் என அச்சமடைந்தோம். ஆனால், தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. இந்த விஷயத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது” என்றார்.

அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும் எனத் தெரிவித்த அவரிடம், உதயநிதியின் பிரச்சாரம் தொடர்பாக கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, “உதயநிதியின் பிரச்சாரப் பயணத்தை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை. வேல் யாத்திரைக்கு பெருகிய ஆதரவை பொறுத்துக்கொள்ளமுடியாமல்தான் உதயநிதி திமுகவை ஆதரித்து பிரச்சாரத்தை நடத்தத் தொடங்கியுள்ளார்” என்று கூறினார்.