நடைமேடையில் கத்தியை உரசியபடியே ரயிலில் வீர சாகசம் செய்தவர்கள் கைது

சென்னை: ரயில்களில் வீரசாகசம் என்ற பெயரில் நடைமேடையில் கத்தியை உரசியபடியே சென்ற மாணவர்கள் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 7ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் புறநகர் மின்சார ரயிலில் கல்லூரி மாணவர்கள் சிலர் வீரசாகசம் செய்துள்ளனர். நடைமேடையில் கத்தியை உரசியபடியே பயணம் செய்துள்ளனர். இதை பார்த்த சிலர் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

இந்த காட்சிகள் அனைத்தும் சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி உள்ளன. இதை கண்ட போலீசார் தக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் அனைத்தும் கத்திவாக்கம், அத்திப்பட்டு புதுநகர், அத்திப்பட்டு ரயில் நிலைய நடைமேடை களில் நடந்தேறியுள்ளன. அவர்கள் நடைமேடையில் கத்தியை உரசும் காட்சி பார்ப்பவர்களை பதற வைக்கிறது.

இந்த விவகாரத்தில் ரயில்வே போலீசார் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் கும்மிடிப்பூண்டி சேர்ந்த அன்பரசு, அருள், ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தின் முன் விசாரிக்கப்பட்டு தண்டனையும் கொடுக்கப்பட்டது.

இதில் 2 பேர் 17 வயதை சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஒரு சிறுவன் சிறையில் அடைக்கப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.