2020–ம் ஆண்டின் சிறந்த நபர்களாக ஜோ பைடன், கமலா ஹாரிசை தேர்ந்தெடுத்த டைம் இதழ்

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோரை 2020-ம் ஆண்டின் சிறந்த நபர்களாக டைம் இதழ் தேர்ந்தெடுத்து கவுரவித்துள்ளது.

சுகாதார பணியின் முன்கள பணியாளர்கள், தேசிய தொற்று நோயியல் அமைப்பின் இயக்குனர் அந்தோணி பயூசி மற்றும் அதிபர் டிரம்ப் ஆகிய மற்ற 3 போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் இந்த ஆண்டின் சிறந்த நபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக டைம் இதழ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டைம் இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவின் கதையை மாற்றியமைத்து, பிரிவினைவாதத்தை விட அன்பிற்கு தான் அதிக சக்தி என்பதை எடுத்துரைத்ததற்காகவும், உலகில் பிரச்சினையை தீர்க்க கருணை அவசியம் என்பதை உணர்த்தியதற்காகவும் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் இந்த ஆண்டு சிறந்த நபர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசின் புகைப்படங்களை அட்டைப்படமாக வெளியிட்டுள்ள டைம் இதழ், அமெரிக்காவின் கதை மாறுகிறது என்று தலைப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டிரம்பை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவர் வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவி ஏற்கவுள்ளார்.