பொதுப் போக்குவரத்தை ஓரளவாவது இயங்க வழிவகை செய்ய வேண்டும்; மக்கள் நீதி மய்யம் கட்சி அறிக்கை

பொதுப் போக்குவரத்தை ஓரளவாவது இயங்க வழிவகை செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசும் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் இ-பாஸ் முறையை மத்திய அரசு விலக்கியும் தமிழக அரசு நடைமுறைபடுத்தி வருகிறது. மேலும் பொதுப்போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் குமாரவேல் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இ-பாஸ் முறை தேவையில்லை என மத்திய அரசு அறிவுறுத்திய பின்னரும், இனியும் அது குறித்த ஆலோசனையே தேவையற்றது. உடனடியாக பொது போக்குவரத்தை ஓரளவாவது தொடங்கி, மக்கள் வேலைக்குச் செல்லும் வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்!

ஆகஸ்ட் 31-க்குப்பின் ஊரடங்கு தேவைதானா என்று அரசு பரிசீலிக்க வேண்டும். மக்கள் வேலைக்கு செல்லும் வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும். அதற்கு இ-பாஸ் தளர்வு மட்டும் போதாது. அரசு பொதுப் போக்குவரத்தை ஓரளவாவது இயங்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.