கடுமையான தண்டனை வழங்க வேண்டும்; சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கடுமையான தண்டனை... திருமணமானதை மறைத்து இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மாயமான பத்தாம் வகுப்பு மாணவியை மீட்டு தரக்கோரி அவரது தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

காணொலிக் காட்சி மூலமாக இளம் பெண்ணை ஆஜர்படுத்திய போலீசார், இவர் ஏற்கெனவே திருமணமான ஒருவரை கரம்பிடித்து உள்ளதாக சுட்டிக் காட்டினர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் இவ்வாறு வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணமான ஆண்களைக் கரம் பிடிக்கும் இளம்பெண்கள் பல்வேறு துன்பங்களை சந்திக்க நேரிடுவதாக வேதனை தெரிவித்தனர்.

மேலும், தமிழகத்தில் இதுவரை எத்தனை திருமண மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ள இந்த வழக்கில் வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்வோருக்கு அதிர்ச்சி தரும் வகையில் உத்தரவுகள் வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.