இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே இறுதி நாள்

சென்னை: நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்த மருத்துவம், ஆயுர் வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

எனவே இந்த இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுவுள்ளது. ஆண்டுதோறும் இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.2023-24-ம் ஆண்டிற்கான நீட்தேர்வு மே 7-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு எழுதவும் 499 நகரங்களில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி நிறைவடைந்தது. அதையடுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் இன்று நள்ளிரவு 11.30 மணிவரை விண்ணப்பிக்கலாம்.

இதனை அடுத்து 13-ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். மேலும் விவரம் அறிய 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.