மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க இன்றே இறுதி நாள்

சென்னை:கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுமா ? தமிழ்நாட்டில் உள்ள மின்நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. எனவே இதற்கான பணியை தமிழ்நாடு மின்சார வாரியம், கடந்தாண்டு நவம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 30-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு, சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.

எனவே அதன்படி ஆதார் எண் - மின் இணைப்பு எண் இணைப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் 2,210 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்களும் அமைக்கப்பட்டிருந்தன. அதன் பின்னர் மின் நுகர்வோரின் வசதிக்காக ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகும் பெரும்பாலானோர் இணைக்காததால் மீண்டும் கால அவகாசத்தை நீட்டித்து பிப்ரவரி 15-ம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை வரை 2 கோடியே 61 லட்சம் மின் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்புடன் இணைத்துள்ளனர். அத்துடன் சுமார் 6 லட்சம் பேர் இன்னும் இணைக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து மின் இணைப்பு என்னுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இதனையடுத்து மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் சலுகைகள் ரத்தாகுமா? அல்லது கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு அனைத்து மின் நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படுமா? என்பது பற்றி இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.