இ-பாஸ் நடைமுறை எளிதானதால் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

இ-பாஸ் நடைமுறை எளிதானதால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே முக்கிய காரணங்களுக்காக மக்கள் தடையின்றி பயணிக்க இன்று முதல் ஆதார் அல்லது ரேஷன் அட்டை விவரங்களுடன் தொலைபேசி எண்ணையும் சேர்த்து விண்ணப்பித்தால் எந்தவித தாமதமும் இல்லாமல் உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்படும். பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் விண்ணப்பித்து, இ-பாஸ் பெற்றுக்கொண்டு பயணிக்கலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 14-ந்தேதி ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.

விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் உடனுக்குடன் கிடைக்கும் என்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இ-பாஸ் தளர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, ஆன்லைனில் முறையான காரணங்களுக்காக விண்ணப்பித்தால் உடனடியாக, இ-பாஸ் கிடைக்கிறது. அதேவேளை வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர தற்போதுள்ள இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் உள்ளது.

இ-பாஸ் நடைமுறை எளிதானதால் சென்னையின் நுழைவு வாயில் என்று சொல்லப்படும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. சென்னையில் இருந்து ஏராளமனோர் சொந்த ஊர் செல்வதையும், ஏற்கனவே சொந்த ஊர் திரும்பியவர்கள் மீண்டும் சென்னைக்கு வருவதையும் காண முடிகிறது. பொது போக்குவரத்து இல்லாததால் இரு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் பயணிப்பதை காண முடிகிறது.