ஜூன் 1-ம் தேதி முதல் ரெயில் சேவை: 1.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவது ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முன்பதிவு செய்யப்பட்ட ரெயில்கள் அனைத்து ரத்து செய்யப்பட்டு, பயணிகளுக்கான முன்பதிவு கட்டணம் திரும்ப வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஜூன் 1-ம் தேதி முதல் வழக்கத்தில் உள்ள கால அட்டவணைப்படி ஏசி அல்லாத 200 ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரெயில்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, இணையதள டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்கள் பலர் இணையதளம் மூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்தனர். இதனால் விறுவிறுவென டிக்கெட்டுகள் காலியாகின.

முன்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்திலே கிட்டத்தட்ட 1.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக ரெயில்வே அதிகாரிகள் கூறி உள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு, புலம் பெயர் தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரெயில்களை ரெயில்வே இயக்கி வந்தது. தற்போது கூடுதலாக 200 ரெயில்கள் இயக்கப்படுவதால் கூட்ட நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.